Anjahli

welcome

இணைய மற்றும் தொழில்நுட்ப போக்குகள் 2009... ஹைலைட்ஸ் :


2009 ஆம் ஆண்டில் ஆதிக்கம் செலுத்திய தொழிநுட்ப நிகழ்வுகள் மற்றும் இணையத்தின் முக்கிய போக்குகள் பற்றிய ஒரு பார்வை

தேடல் யுத்தம் துவங்கியது..!

2008-ல் கூகுல் குரோம் பிரவுசரை அறிமுகம் செய்து, மைக்ரோசாப்டுடன் பிரவுசர் யுத்தத்தை துவக்கியது என்றால், 2009-ல் மைக்ரோசாப்ட், 'பிங்' தேடியந்திரத்தை அறிமுகம் செய்து கூகுலின் தேடல் கோட்டைக்குள் நுழைந்தது. பிங்கின் பரபரப்பான அறிமுகத்தை அடுத்து விறுவிறுப்பான தேடல் யுத்தமும் ஆரம்பமானது.

மென்பொருள் மகாராஜாவான மைக்ரோசாப்டின் முந்தைய தேடியந்திர முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இருப்பினும், 'பிங்' தேடியந்திரத்தை பொருத்தவரை வடிவமைப்பிலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி பரவலாக பாராட்டப்பட்டது. பொருத்தமான தேடல் முடிவுகளை பட்டியலிடுவதில் பிங் கையாண்ட யுக்திகளும் பாராட்டப்பட்டது.

புதிய தேடியந்திரத்தை மைக்ரோசாப்ட் பிரம்மாண்டமான முறையில் விளம்பரம் செய்தது. பத்திரிக்கைகளும் நாளிதழ்களும் கூகுலுக்கான போட்டியாக பிங் உருவாகியிருப்பதாக எழுதின. அம்சத்துக்கு அம்சம் கூகுலோடு ஒப்பிடப்பட்டு பிங்கின் செயல்பாடுகள் அலசி ஆராயப்பட்டன.
மே மாதம் அறிமுகமான பிங் அடுத்த மாதம் 10 சதவீத தேடல் சந்தையை கையகப்படுத்தியதாக புள்ளிவிவரங்கள் வெளியாயின. ஆனால், கூகுல் தன் பங்குக்கு அலட்டிக்கொள்ளவில்லை. எப்போதும் போல் தேடல் சார்ந்த புதிய சேவைகளை அறிமுகம் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தது. பிங் முன்னணி தேடியந்திர அந்தஸ்தை பெற்றதே தவிர, தேடல் முதல்வன் என்னும் மகுடத்தை கூகுலிடம் இருந்து பறிக்க முடியவில்லை.

எப்பவும் நான் ராஜா!

ஜுன் 25 ஆம் தேதி நிகழ்ந்த மைக்கேல் ஜாக்சனின் மரணம் அவரது ரசிகர்களை உலுக்கியதோடு இன்டெர்நெட் உலகையும் அதிரச் செய்தது. மைக்கேல் ஜாகசனின் மரண செய்தி டிவிட்டரில் முதலில் வெளியாகி ரசிகர்களை பதற வைக்க, அந்த அதிர்ச்சி செய்தி உண்மைதானா என உறுதி செய்து கொள்ள ரசிகர்கள் இன்டெர்நெட்டுக்கு படையெடுத்தனர். அதன் பிறகு தேடியந்திரங்களில் திரும்பிய இடமெல்லாம் மைக்கேல் ஜாக்சன் தான். பாப் இசை மன்னன் ஜாக்சன் மரணம் உறுதியானதும் அவரைப் பற்றிய தகவகல்ளை தெரிந்து கொள்ளவும், இறுதிச்சடங்கு உள்ளிட்ட விவரங்களை அறியவும் ரசிகர்களும், பொது மக்களும் இன்டெர்நெட்டை முற்றுகையிட்டனர்.

ஜாக்சன் பற்றிய தேடல் கோரிக்கைகள் அளவுக்கு பன்மடங்கு அதிகமானதால் ஒரு கட்டத்தில் கூகுல் இது எதோ இணைய தாக்குதல் என்று அஞ்சி தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. ஜாக்சன் தொடர்பான இணையதேடலின் வேகமும் தீவிரமும் இன்டெர்நெட்டில் ஏற்பட்ட எரிமலை என வர்ணிக்கப்பட்டது. சர்சைக்குறியவராக வாழ்ந்து மறைந்தாலும் இசை உள்ளங்கள் மீது ஜாக்சன் எத்தனை செல்வாக்கு பெற்றிருந்தார் என்பதை இன்டெர்நெட் சரியாகவே உணர்த்தியது. அவரைப் போன்ற இன்னொரு இசைக்கலைஞர் பிறந்து வரவேண்டும்.

இந்த நேரத்தில் தேடல்!

140 எழுத்துக்களில் உடனடி பதிவுகளை வெளியிட உதவும் டிவிட்டர் சேவையின் எழுச்சி பெற்றதன் விளைவாக தேடல் உலகிலும் உடனடி தேடல் என்னும் புதிய கருத்தாக்கம் அறிமுகமானது. பொதுவாக தேடியந்திரங்கள் இணைய பக்கங்களை தொகுத்து வைத்துக்கொண்டு, அவற்றிலிருந்து பொருத்தமான தேடல் முடிவுகளை அள்ளிப்போடும். கூகுல் இதில் மன்னனாக இருக்கிறது. ஆனால், டிவிட்டரில் உடனுக்குடன் பகிரப்படும் தகவல்கள் இந்த தேடல் சித்தாந்ததையே மாற்றுவதாக அமைந்தது.

இணைய பக்கங்களையும் தளங்களையும் தேடுவதை விட்டுத்தள்ளுங்கள். இதோ இந்த நொடியில் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்படும் விவரங்களை தேடினால் செய்தியின் நாடித்துடிப்பை துல்லியமாக அறியலாம் என்னும் கருத்து முன்வைக்கப்பட்டது. இந்த கருத்துக்கு புதிய தேடியந்திரங்கள் செயல் வடிவமும் கொடுத்தன. ஒன் ரயாட் போன்ற தேடியந்திரங்கள் இத்துறையில் பிரபலமாக பிங் தேடியந்திரமும் டிவிட்டர் சார்ந்த வசதியை ஒருங்கிணைத்து கொண்டது. ரியல் டைம் சர்ச் என்று சொல்லப்பட்ட இந்த டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் சார்ந்த தேடல் புதிய அலையாக உருவானது. இறுதியில் கூகுலும் இந்த நேர தேடல் சேவையை அறிவித்தது.


விக்கி விவாதம்!

இணைய தொண்டர்களின் பங்களிப்போடு உருவாக்கப்படும் உலகின் மிகப்பெரிய இணைய களஞ்சியமான விக்கிபீடியாவின் ஆங்கில பதிப்பு 30 லட்சம் கட்டுரைகள் என்னும் மைல்கல்லை எட்டியது. இந்த சாதனை ஒரு புறம் இருக்க, புகழ்பெற்ற இயக்குனர் போலன்ஸ்கி சர்சையின் போது, விக்கிபீடியாவும் சேர்ந்து மாட்டிக்கொண்டு முழித்தது.

ஆஸ்கர் விருது வென்றவாரான ரோமன் போலன்ஸ்கியின் மேதமை மீது எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன் இளம்பெண் ஒருவரை பாலியல் பாலாத்காரம் செய்த வழக்கு தொடர்பாக அமெரிக்காவின் வேண்டுகோளின் படி ஸ்விஸ் நாட்டில் இவர் கைது செய்யப்பட, பெரும் சர்ச்சை உண்டானது. இந்தப் பழைய வழக்கில் சட்டம் தன் கடமையை செய்கிறது என்று சொல்லப்பட்டாலும், ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் திரை உலக பிரமுகர்கள் போல்ன்ஸிகியை விடுவிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். வாழ்நாள் சாதனையாளர் விருது பெற வந்த தேசத்தில் அவர் கைது செய்யப்பட்டது சரியா என கேட்கப்பட்டது.

ஆனால், விக்கிபீடியா சமுகத்திலோ வேறுவிதமான மோதல் வெடித்தது. போலன்ஸ்கி தொடர்பான கட்டுரையில் இந்த கைது விவகாரத்தை எப்படி இடம்பெற வைப்பது என்னும் கேள்வியே மோதலுக்கு வித்திட்டது. போலன்ஸ்கி ஒரு திரை மேதையாக இருக்கலாம், ஆனால் அவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு இலக்கானவர். எனவே, அவரைப் பற்றிய அறிமுகத்தில் அவர் ஒரு கயவர் என்பது பிரதானமாக இடம் பெறவேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறித்தினர். இன்னொரு தரப்பினரோ போல்ன்ஸ்கியின் மேதமையை இந்த கைது எந்த விதத்திலும் பாதிக்காது. ஆகவே இதனை பெரிதுபடுத்தாமல் ஒரு தகவலாக மட்டும் சேர்த்துக்கொண்டால் போதும் வாதிட்டனர்.

விக்கிபீடியாவில் தான் யார் வேண்டுமானாலும் திருத்த செய்யலாமே. முதல் முகாம் போல்ன்ஸ்கி கட்டுரையில் அவர் ஒரு 'காமுக கயவர்' என்பது போன்ற வாசகங்களை சேர்க்க, மறு முகாம் அதனை உடனே திருத்தியது. முதல் முகாம் மீண்டும் திருத்த பதிலுக்கு மறு முகாம் திருத்த... விக்கிபீடியாவில் திருத்தல் யுத்தம் வெடித்து, அதன் விளைவாக போலன்ஸ்கி கட்டுரை தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டது.

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று போட்டியின் போது அயர்லாந்துக்கு எதிராக இத்தாலி வீரர் ஹென்றி கையை கொண்டு கோல் அடிக்க சர்ர்சை எழுந்த போதும், அவரது விக்கிபீடியா பக்கம் இப்படி தாக்குதலுக்கு இலக்கானது.

இதனிடையே விக்கிபீடியாவின் விதிகள் கடுமையாக்கப்பட்டதன் விளைவாக, 49 ஆயிரம் விக்கி தொண்டர்கள் அதிருப்தியில் வெளியேறிவிட்டதாக ஓர் ஆய்வு தெரிவிக்க, விக்கியின் எதிர்காலம் குறித்த விவாதமும் அனல் பறந்தது.

ஃபேஸ்புக் மாயம்!

அமெரிக்கக் கல்லூரி மாணவர்களுக்கான சமூக வலைப்பின்னல் தளமாக அறிமுகமான ஃபேஸ்புக், பொது மக்களுக்கும் விரிவடைந்து, அதன் தொடர்ச்சியாக இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் விரிவடைந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் அமெரிக்காவுக்கு வெளியே தான் அபார வளர்ச்சி அடைந்தது.

ஃபேஸ்புக்கின் அசுர வளர்ச்சி புதிய போக்குகளுக்கும் புதிய வார்த்தைகளுக்கும் வித்திட்டது. நண்பர்களை தேடிக் கண்டுபிடிக்க உதவும் இந்தத் தளம் ஃபிரண்ட் என்னும் வார்த்தைக்கு புதிய அழுத்தத்தை தந்தது போல அன்ஃபிரண்ட், அதாவது நண்பனில்லாமல் செய்வது என்னும் புதிய வார்த்தைக்கும் வித்திட்டது. ஒருவரின் நண்பர் பட்டியலில் இருந்து குறிப்பிட்ட ஒருவரை நீக்குவதை குறிக்கும் இந்தச் சொல் ஆண்டின் சிறப்புச் சொல்லாகவும் அங்கீகரிக்கப்பட்டது.

ஃபேஸ்புக்கின் புதிய அந்தரங்க கொள்கை சற்றே சலசலப்பை உண்டாகவும் செய்தது. மொத்ததில் இது டிவிட்டர் ஆண்டு மட்டுமல்ல... ஃபேஸ்புக் ஆண்டும் தான்.

செயலிகளில் அசத்திய ஆப்பிள்!

ஒரு நிறுவனத்தின் விளம்பர வாசகத்தில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்குமானால், அது ஆப்பிளின் செயலிக்கான விளம்பர வாசகமாகத்தான் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு செயலி (Operating System) உண்டு என்று ஆப்பிள் விளம்பரத்தில் பெருமைப்பட்டுக் கொள்வதை மெய்பிக்கும் வகையில், 2009 முழுவதும் விதவிதமான செயலிகள் அறிமுகமான வண்ணம் இருந்தன.

குழந்தை அழுவதை நிறுத்த ஒரு செயலி என்றால், குளியலறையை கண்டுபிடிக்க ஒரு செயலி உருவானது. டயட் அறிவுரை வழங்க ஒரு செயலி எனறால், விமான நிலையத்தில் அருகே இருக்கும் நண்பரை சுட்டிக்காட்ட ஒரு செயலி அறிமுகமனது. இதற்கெல்லாம் கூட செயலி உண்டா என்று வியந்து போகும் வகையில் புதுமையான மற்றும் பயன் மிக்க செயலிகள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. ஐபோனுக்கான சின்ன சின்ன சாஃப்ட்வேருக்கு ஆப்பிள் கொடுத்த ஆப்ஸ் (செயலி) என்னும் பெயர் தனக்கே உரிய அர்த்ததோடு இணைய உலகில் கோலோச்சுகிறது.

செயலிகள் அறிமுகமான் வேகத்தால் ஏப்ரல் மாதம் நூறு கோடி செயலி டவுன்லோடு மைல்கல்லை தொட்ட ஆப்பிள், சில மாதங்களிலேயே 200 கோடி டவுன்லோடு சிகரத்தை தொட்டது. செயலிகளின் செல்வாக்கால் ஆப்பிள் ஸ்மார்ட்போன் சந்தையில் தனிக்காட்டி ராஜாவாக திகழ்கிறது. அது மட்டுமல்ல, பலமென்பொருள் நிபுணர்கள் செயலிகள் புண்ணியத்தால் ஆயிரங்களையும் லட்சங்களையும் சம்பாதித்து வருகின்றனர்.


கூகுல் சித்திரங்கள்!

கூகுல் சில நேரங்களில் தனது லோகோவையே சித்திரமாக மாற்றி அமைத்து வியக்க வைப்பதுண்டு. கூகுல் டூடுல் என்று சொல்லப்படும் இந்த லோகோ விளையாட்டு முக்கிய தினங்கள் மற்றும் மேதைகளின் நினைவு தினங்களின் போது அரங்கேறுவது வழக்கம்.

கடந்த ஆண்டு முழுவதும் கூகுல் பல்வேறு சந்தர்பங்களில் விதவிதமான லோகோ சித்திரத்தை உருவாக்கி இந்த நிகழ்வை இணைய உலகம் முழுவதும் பிரபலாமாக்கியது. கலிலியோ, மகாதமா காந்தி ஆகியோர் தொடர்பான லோகோவை வடிவமைத்த கூகுல், பார்கோடு மற்றும் மோர்ஸ் கோடு குறித்த லோகோவையும் உருவாக்கி பரபப்பை ஏற்படுத்தியது. எதற்காக இந்த லோகோ என்னும் வியப்பை ஏற்படுத்தி, அதனை விளக்கும் தகவல்களை அளித்த இந்த லோகோக்கள் கூகுலை மேலும் இணையவாசிகளூக்கு நெருக்கமாக்கியது.

டிவிட்டர் ஆண்டு!

2009 ஆம் ஆண்டு இணைய உலகில் திரும்பிய இடமெல்லாம் ஒலித்த வார்த்தை... டிவிட்டர்.

140 எழுத்துக்களில் கருத்துக்களை பதிவு செய்ய உதவும் குறும்வலைப்பதிவு சேவையான டிவிட்டர், வெகுமக்களுக்கும் அறிமுகமானதோடு செய்தி வெளியீட்டுக்கான சாதனமாக அறிமுகமாகி செல்வாக்கு பெற்றது. மைக்கேல் ஜாகசன் மரணத்தில் துவங்கி, விமான விபத்து வரை பல நேரங்களில் உடனடி செய்திகள், டிவிட்டர் மூலமே வெளியானது. அதோடு ஈரானில் அதிபர் தேர்தலில் முறைகேடு ஏற்பட்ட போது, அரசின் கட்டுப்படுகளை மீறி வன்முறை மற்றும் தேர்தல் தில்லுமுல்லு தொடர்பான செய்திகளை ஈரான் மக்கள் டிவிட்டர் மூலம் உலகின் பார்வைக்கு கொண்டு சென்றனர். ஈரான் தேர்தல் தோடர்பான் அமெரிக்க மீடியாவின் கவனம் போதுமானதல்ல என்று எடுத்துச் சொல்லவும் டிவிட்டர் பயன்பட்டது. ஈரான் போராட்டத்தில் டிவிட்டரின் பங்களிப்பு காரணமாக அந்த தளத்தின் வழக்கமான பாரமரிப்பு பணியை தாமதப்படுத்துமாறு அமெரிக்க அரசு கேட்டுக்கொள்ளும் அளவுக்கு டிவிட்டர் முக்கியத்துவம் பெற்றது.

இதற்கு முன்னர் மால்டோவா நாட்டிலும் டிவிட்டர் சின்னதாக ஒரு புரட்சிக்கு வித்திட்டது. இதே போல புதிய ஹாலிவுட் படங்களை பார்த்த ரசிகர்கள் உடனே டிவிட்டரில் படம் எப்படி என கருத்து தெரிவித்து பாக்ஸ் ஆபிஸ் வசூலை தீர்மானித்தனர்.
இப்படி எங்கு பார்த்தாலும் டிவிட்டர்மயம் தான். இதுவரை டிவிட்டரை கேள்விப்பட்டிறாதவர்கள் கூட அட டிவிட்டர் என்றால் என்ன என்று கேட்டு, அதன் அபிமானிகள் ஆயினர்.

டிவிட்டரில் குதித்த பிரபலங்களின் பட்டியல் மேலும் புகழை ஏற்படுத்தியது. சுருக்கமாகச் சொன்னால் 2009 - டிவிட்டர் ஆண்டு. இந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட சொற்களில் 'டிவிட்டர்' முதலிடம் பெற்றது பொருத்தமானது தானே!

3 comments:

அண்ணாமலையான் said...

நல்ல தொகுப்பு...வாழ்த்துக்கள்...

Nishan said...

Engayo partha mathiri irukku.... But enganu theriyala... Gud Article.... write more....

OURTECHNICIANS HOME BASE SERVICES said...

If your Washer did not last everlastingly, but with correct maintenance you can expect yours to serve you a long time.so handle be a gentle!If you trouble for your appliance well and it still breaks, call you home appliance repair service. Your appliance could still be covered under warranty to a product recall.
For further detail visit our locate please click here>>
home appliances in trichy
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/

Post a Comment