Anjahli

welcome

ஹைகூ


மொத்தம் மூன்று வரிகள், மிகுந்தால் நான்கு.... எல்லோரையும் எளிதில் கவர்ந்து விடும் ஹைகூ ஜப்பானிய மொழியிலிருந்து தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ‘கவிதை வடிவம்’. இதன் எளிமையே இதன் கவர்ச்சிக்குக் காரணம். இதை முதலில் தமிழுக்கு மொழிமாற்றம் செய்து அறிமுகப்படுத்தியவர் திருமதி லீலாவதி அவர்கள்.

“ஏதோ ஐந்தாறு வார்த்தைகளைப் போட்டோமா.. மூன்று வரிகள் எழுதினோமா.. ஹைகூன்னு தலைப்பைப் போட்டோமா!” இப்படி சுலபத்தில் தோன்றியதை எழுதுவது ஹைகூ அல்ல! திருமதி லீலாவதி அவர்கள் தமது தொகுப்பில், “ஹைகூ என்பது கவிதையானாலும், எல்லாக் கவிதையும் ஹைகூ ஆகிவிட முடியாது” என்று கூறியுள்ளார். புதுக்கவிதைக்கு எந்த விதமான வரையறைகளும் இல்லை. ஆனால் ஹைகூவிற்குச் சில வரையறைகள் உண்டு.

இரண்டு வரிகளில் ஒன்றும் புரியாமல், மூன்றாவது வரியில் படிப்பவர்க்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியதாக ஹைகூவை அமைக்கலாம். அல்லது மூன்றாவது வரியின் விளக்கம் முதல் இரண்டு வரிகளில் வருமாறு அமைக்கலாம். சமுதாயத்தின் பிரதிபலிப்பாகவே பெரும்பாலான ஹைகூக்கள் அமைக்கப் படுகின்றன. விரைவாகவும், எளிதாகவும் ஒரு செய்தியைச் சொல்வதற்கு இதை விடச் சிறந்த ஒரு வடிவம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கவிஞர் அறிவுமதி தமது ஒரு தொகுப்பில், “சக மனிதர்களோடு மட்டுமின்றி, தளிர்களோடும், மொட்டுக்களோடும், சருகுகளோடும், தும்பிகளோடும், வண்ணத்துப் பூச்சிகளோடும், குயில்களோடும், நட்சத்திரங்களோடும், கடலின் ஆழங்களோடும், காற்றின் அசைவுகளோடும் நம்மை நட்பு கொள்ளத் தோன்றும் அற்புத வடிவம்தான் ஹைகூ” என்று கூறியுள்ளார்.



ஜப்பானிய ஹைகூக்கள்

1. காலைப் பனியில்
மலர்கள் விற்கும் முரடன்
கொல்லாதே! கைகளையும்
கால்களையும் தேய்த்துக் கொண்டிருக்கிறது
“ஈ”....

2. செவிட்டு ஊமையின்
பிச்சைப் பாத்திரத்தைத்
தட்டுகிறது
“மழை”...

தமிழ் ஹைகூக்கள்

1.கனவுகளோடு பறந்தோம்!
கனவுகளும் பறந்தன
“துபாய் வாழ்வு”

2.ஆங்கிலத்தில் அறிவிப்பு
இந்திப் பாடலுக்கு நடனம்
“தமிழ்ச் சங்க நிகழ்ச்சி”

3.தீப்பெட்டியைத்
திறந்தேன்
“பிஞ்சு விரல்கள்”

4.தொடர் மழைக்காலம்
குப்பைகளுக்கும் குடை!
“காளான்கள்”

5.எதிர் வீட்டுச் சன்னல்களில்
எத்தனை சட்டைகள்!
என் சட்டையில் எத்தனை ஜன்னல்கள்!

6.ராகங்கள் எரிகின்றன
அழுமா மழை?
“மூங்கில் காட்டில் தீ”

7.கிணற்றுச் சரிவில்
குருவியும் குஞ்சுகளும்
“மனதில் இருக்குது வாழ்க்கை!”

8. மரணத்தைச் சுவாசிக்கக்
கால இடைவெளி
“ஃப்ரிட்ஜில் பூ”

9.புகை கக்கியபடி
வருகிறது நந்தவனம்
“லேடீஸ் பஸ்”

10.பிறக்கும் போதே
சிக்கலுடன் பிறக்கிறது
“ஜாங்கிரி”

11.நல்ல வெயில்
தோகை விரித்தது மயில்
“குடையுடன் அவள்”

12.வாரிசுகளை நம்பாமல்
தனக்குத் தானே கொள்ளி
“உதட்டிடுக்கில் புகை”

13.உருவம் தவிர்த்து
உணரத் தொடங்கு
“காதலோ! கடவுளோ!”

14.வாங்கியதால் உள்ளே தள்ளிவிட்டார்கள்....
கொடுத்ததால் வெளியே வந்துவிட்டேன்....
“லஞ்சம்”

15.புரண்டு புரண்டு அழுகை
அப்படி என்னதான் குறை?
“பேசுமா அலைகள்!”